Saturday, October 16, 2010

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


     நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை பலவீனன் என்று நினைத்தால், நீ பலவீனமாக இருப்பாய். உன்னை வலிமை உள்ளவன் என்று நினைத்தால் வலிமை உள்ளவனாக நீ இருப்பாய்.

     ஒரு போதும் ‘இல்லை’ என்று எதிர்மறையாக சொல்லாதே. ‘என்னால் முடியாது’ என்று ஒருபோதும் சொல்லாதே. ஏனென்றால் உன் திறமைக்கு எல்லை கிடையாது. உன்னுடைய இயற்கைத் திறனோடு காலத்தையும் இடத்தையும் ஒப்பிட்டால் அவை ஒன்றுமே இல்லை. நீ எதையும் சாதிக்க முடியும். நீ சர்வ வல்லமை உள்ளவன்.

     பலவீனத்தை போக்க விரும்பி அதையே நினைத்துக் கொண்டிருந்தால் ஒன்றுமே முடியாது, வலிமையை எண்ணினால் பலவீனம் போய்விடும். உன்னுள் வலிமை ஏற்கனவே இருக்கிறது. அதைப் பயன்படுத்து.

     வலிமை பற்றி சொல்லும்போது மட்டுமே உபநிஷத்திலிருந்து மேற்கோல் சொல்வேன். வேதங்களும் வேதாந்தமும் வலிமை ஒன்றையே வலியுறுத்துகின்றன.

     இந்த ஒரு கேள்விதான் நான் ஒவ்வொருவரிடமும் கேட்பது: “நீ வலிமையுடன் இருக்கிறாயா? வலிமை உடையவனாக இருப்பதை உணர்கிறாயா? ஏனென்றால் உண்மையைக் கடைப்பிடிப்பது தான் வலிமை அளிக்கும். உலகத்து நோய்களுக்கு வலிமைதான் மருந்து.

     வெற்றிபெற வேண்டுமானால் அளவு கடந்த விடாமுயற்சி வேண்டும். உறுதியான மனமும் வேண்டும். விடமுயற்சியுடைய ஆன்மா, ‘நான் சமுத்திரத்தைக் குடித்துத் தீர்ப்பேன்’ என்று சொல்லும். ‘நான் மனம் வைத்தால் மலைகளை கூட நொறுங்க செய்யமுடியும்’ என்று சொல்லும். அப்படிபட்ட ஆற்றலுடன் மனவலியுடன் இருத்தல் வேண்டும். கடினமாக உழை. உன் இலட்சியம் நிறைவேறும்.

     ஒருவன் தன்னால் இயன்ற அளவு முயற்சி செய்யாவிட்டால் எதையும் செய்து முடிக்க இயலுமா? செயல் வீரனாகவும், சிங்கம் போன்று அஞ்சா நெஞ்சம் கொண்டவனாகவும் உள்ளவனிடமே செல்வம் சேரும். முயற்சி மேற்கொள்ளும்போது கடந்து போனதை நினைத்து கொண்டிராதே. முன்னே நோக்கு. அளவற்ற ஆற்றல் வேண்டும். அளவற்ற ஆர்வமும் ஊக்கமும் வேண்டும். அளவற்ற தைரியம் வேண்டும். அளவற்ற பொறுமை வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால் பெரிய சாதனைகளை புரிய இயலும்.

     யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். உனக்கு சரி என்று படுவதை நீ விடாதே. அப்படி இருந்தால் உலகம் உன் காலடியில் வரும். ‘அவர் சொல்வதை நம்பு. இவர் சொல்வதை நம்பு’ என்று மற்றவர்கள் சொல்வார்கள். ஆனால் முதலில் நீ உன்னை நம்ப வேண்டும். எல்லா ஆற்றலும் உன்னிடம் உள்ளது. அதை அறிந்து வெளி கொணர். ‘நான் எதையும் சாதிக்க முடியும்’ என்று சொல். பாம்பின் விஷம்கூட என்னை ஒன்றும் பண்ண முடியாது என்று உறுதியாக மறுப்பாயேயானால் விஷம் பலமற்று, பயனற்றுப் போகும்.

     ஒருமுறை நான் வாரணாசிக்குச் சென்றிருந்தேன். அந்த ஊரில் ஒரு பக்கம் பெரிய தண்ணீர் தொட்டியும், மறுப்பக்கம் உயரமான சுவரும் இருக்கின்ற வழியில் போய்க் கொண்டிருந்தேன். தரையில் ஏராளமான குரங்குகள் திரிந்தன. அவை முரட்டுதனம் மிக்கவையாக இருந்தன. அவை என்னைத் தெருவழி போகவிடாமல் தடுத்தன. அவை கத்திக் கொண்டு வந்து என் பாதத்தைக் கவ்வ நெருங்கின. அவை என்னை நெருங்கவும் வேகமாக ஓட ஆரம்பித்தேன். அவையும் வேகமாக பின்தொடர்ந்து கடிக்க வந்தன. தப்ப முடியாது என்ற நிலையில் அங்கு எதிர்பட்ட ஒருவர், குரங்குகளை எதிர்த்து நில்லுங்கள்! ஓடாதீர்கள்!” என்று உரக்க சொன்னார். நான் உடனே திரும்பி நின்று குரங்குகளைப் பார்த்துமுறைத்தேன். அவை உடனே பின்வாங்கி ஓடிப்போய் விட்டன. வாழ்க்கைக்கும் இந்த பாடம் உதவும். ஆபத்தை எதிர்கொள். தைரியமாக எதிர்கொள்.

     எதிர்த்து நில், போராடு, பின்வாங்காதே. ஓர் அடிகூட பின் வைக்காதே. என்ன வேண்டுமானாலும் வறட்டும். போராடுவதை நிறுத்தாதே. உலகமே எதிர்த்து வரட்டும். சாவுதானே வரும். வந்தால் என்ன? போராடு. கோழையாக இருப்பதால் எந்த இலாபமும் இல்லை. உலகத்திலுள்ள எல்லாக் கடவுள்களிடமூம் கத்தி பிரார்த்தித்தாய். துன்பம் தீர்ந்ததா? நீ வெற்றி பெற்றவனானால் கடவுள்களும் உனக்கு உதவி செய்ய முன்வருவார்கள். அப்படியிருப்பதால் பிரார்த்தனையால் என்ன பயன்? நீ அளவெல்லை அற்ற ஆன்மா. அப்படியிருக்க நீ அடிமையாவது பொருந்துமா? எழுமின்! விழுமின்! எதிர் நின்று போராடுமின்!

     செயலற்ற சோம்பேறி வாழ்க்கையைவிட சாவு மேல். தோல்வியுற்று வாழ்வதைவிட போர்க் களத்தில் மடிவது மேல்.

     கடலை கடக்க வேண்டுமானால் இரும்பு நெஞ்சம் வேண்டும். மலையைத் துளைத்துச் செல்லக் கூடிய அளவு நீ வலிமையுடையவனாக இருக்கவேண்டும்.

     ஒரு நோக்கம் கொள்ளுங்கள். அதை உங்கள் வாழ்க்கை லட்சியமாக ஆக்குங்கள். அதைப்பற்றியே சிந்தியுங்கள். கனவு காணுங்கள். அந்நோக்கத்தோடு வாழ்க்கை நடத்துங்கள். உங்கள் மூளை, தசைகள், நரம்புகள் இப்படி உடம்பின் எல்லா பாகங்களும் அந்த நோக்கம் அல்லது கருத்து நிரம்பியிருக்கட்டும். மற்ற எண்ணங்களை, நோக்கங்களை விலக்கி வைத்திருங்கள். இது வெற்றி அடைவதற்கு வழி.

     மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாயிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிக அறிவு உண்டாகும். ஏனென்றால் இது ஒன்றுதான் அறிவு வளர்வதற்கு ஒரே வழி. காலணிக்குப் போடும் மந்தமான கருப்புநிற பாலிஷ்கூட ஒருமுகப்பட்டுத் தேய்க்கப்பட்டால், காலணி நல்ல கருப்பு நிறமாகப் பளபளக்கும். சமையல் செய்பவர் ஒருமுகப்பட்டு அப்பணியை செய்வாரேயானால் சிறப்பான மிகவும் ருசியான உணவு தயாரிக்கப்பட்டுவிடும். பணம் சம்பாதிப்பதிலும் கடவுளை வணங்குவதிலும் அல்லது வேறு எதைச் செய்யும்போதும் ஒருமுகப்பட்டு ஈடுபடும் ஆற்றல் அதிகமாக இருப்பின் நீங்கள் செய்வது சிறப்பாக அமையும். இந்த முறை இயற்கையின் கதவுகளைத் திறக்கச் செய்து, ஒளி வெள்ளம் பாய வைத்துவிடும்.

     மனித மனத்தின் ஆற்றலுக்கு எல்லையளவு கிடையாது. ஒருமுகப்படுத்தும் திறன் கூடக் கூட அதிக ஆற்றல் ஓரிடத்தில் குவியும். இதுதான் ரகசியம்.

     இருவரிடையே ஒருமுகப்படுத்தும் ஆற்றலில் உள்ள வித்தியாசம் அந்த இருவருக்குமிடையே உள்ள வித்தியாசத்தைக் காட்டிவிடும். தாழ்ந்த மனிதனோடு உயர்ந்த மனிதனை ஒப்பிட்டுப் பாருங்கள். ஒருமுகப்படுத்தும் ஆற்றல்தான் இருவரிடையேயுமுள்ள வித்தியாசத்துக்குக் காரணமாக இருக்கும்.

     துரதிஷ்டவசமாக, பெரும்பான்மை மனிதர்கள் இலட்சியம் ஏதுமின்றி இருண்ட வாழ்க்கை வாழ்கிறார்கள். இலட்சியம் கொண்ட மனிதன் ஓராயிரம் தவறுகள் செய்கிறானென்றால் இலட்சிய, ஏதுமற்றவன் ஐம்பதினாயிரம் தவறுகள் செய்கிறான். ஆகவே இலட்சியம் ஒன்று கொண்டிருப்பது நல்லது.

     உங்கள் எண்ணங்களையும், நீங்கள் பேசும் வார்த்தைகளையும் ஒன்றாக இருக்கும்படி செய்யமுடியுமானால் பேச்சிலும் செயலிலும் ஒன்றாகவே இருங்கள். பணம் உங்கள் காலடியில் வந்து கொட்டும், தண்ணீர் போல.

     மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமுள்ள முக்கிய வித்தியாசம் ஒருமுகப்பட்டுச் செயல்படும் ஆற்றல் பொருத்ததாகும். எந்ந ஒரு துறையிலும் வெற்றி பெறுவதற்கு மனம் ஒன்றி ஒருமுகப்பட்டுச் செயல்படும் திறன் தான் காரணம். ஒருமுகப்பட்டுச் செயல்படுவது பற்றி எல்லோருக்கும் ஓரளவுக்கு தெரிந்திருக்கும். மனம் ஒன்றிச் செயல்படுவதனால் ஏற்படும் விளைவுகளை நாம் சாதாரணமாகப் பலரிடம் காண்கிறோம். கலை, இசை முதலியவற்றில் பெரும் சாதனை புரிவதற்கு ஒருமுகப்படும் ஆற்றல் காரணம். சிறந்த கலைப் படைப்பாளிகள், உயர்ந்த இசை விற்பன்னர்கள் ஆகியோரிடம் அந்த ஆற்றல் இருப்பதைப் பார்க்கிறோம். விலங்குகளுக்கு மிகச் சிறிய அளவுதன் ஒருமுகப்பட்டுச் செயல்படும் திறன் உண்டு. விலங்குகளுக்குப் பயற்சி அளித்தவர்களுக்கு இது நன்கு தெரியும். சொல்லித் தந்தவற்றை மிருகம் எளிதில் மறந்துவிடும். மனிதனுக்கு ஒருமுகப்பட்டுச் செயல்படும் ஆற்றல் அதிகம். மனிதருக்கு மனிதர் வித்தியாசப் படுவதற்கு இந்த ஆற்றலே காரணம்.

     எதை நாம் விரும்புகிறோமோ அதன்மேல் மனம் ஒன்றுவது இயல்பு. நீங்கள் விரும்பும் பொருள் பற்றி பேசினால் நீங்கள் நான் பேசுவதை ஊன்றிக் கவனிப்பீர்கள்.

     ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியுமா? அந்த ஆற்றலில் சிறந்து விளங்க முடியுமா? முடியும் என்கிறார்கள் யோகிகள். நம் மனதை நாம் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் என்கிறார்கள். ஒன்றில் ஒருமுகப்பட்டு விட்டால் அதை விட்டு விலக முடியாமல் போவதுண்டு. எனவே மனதை ஒன்றச் செய்வது போல விரும்பும்போது விலகச் செய்யவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். இரண்டு வகை ஆற்றலையும் ஒரே சமயத்தில் வளர்த்து கொள்வது நல்லது.

     என்னைப் பொறுத்தவரை கல்வியின் முக்கிய அம்சம் மனத்தை ஒருமுகப்படுத்துவதுதான். பல விவரங்களை அறிவது அல்ல என்பேன்.
உலகத்தில் நாம் தெரிந்து கொண்டிருப்பதெல்லாம் ஒருமுகப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுதான். எப்படித் தட்டுவது என்று தெரிந்திருந்தால் அப்படித் தட்டும்போது உலகம் பல ரகசியங்களைத் தெரிவிக்க தயாராயிருக்கிறது. மனித மனத்தின் ஆற்றலுக்கு அளவே இல்லை. ஒருமுகப்படுத்தும் சக்தி எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாயிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மனத்தின் ஆற்றல் அதிகமாயிருக்கும்.

     ஒருபுறம் நவீன இந்தியா சொல்கிறது: “நாம் மேற்க்கத்திய கருத்துக்களையும், மொழிகளையும், உணவையும், உடையையும், நடை பாவனைகளையும் மேற்கொண்டால் தான் நாம் வலுவடைந்து மேற்கத்திய நாடுகள்போல் உலகில் வல்லமையுடைய நாடாக ஆக முடியும்”. ஆனால் மறுபுறம் பழைய இந்தியா சொல்கிறது: “முட்டாள். மற்றவர் கருத்துக்களைக் காப்பி அடிப்பதால் அவை உம்முடையதாக ஆகிவிடாது. நீயாக உண்டக்கியவை, உன் சொந்தமானதாக இருக்கும். சிங்கத்தின் தோல் போர்த்திய கழுதை சிங்கமாக ஆகிவிடுமா?”

     மதத்தின் அடிப்படை நோக்கம் மனிதனுக்கு அமைதியும் நிம்மதியும் ஏற்படுத்துவதாகும். இந்த ஜென்மத்தின் துன்பத்தை அனுபவித்தால் அடுத்த ஜென்மத்தில் சுகமான வாழ்க்கை அமையும் என்று நம்புவது விவேகமன்று. இந்த வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் முக்கியம். நடப்பு வாழ்வில் ஆனந்தம் கொணர்வதுதான் உண்மையான மதம்.

     நாம் இப்போதிருக்கிற நிலைமைக்கு நாம்தான் பொறுப்பு. எப்படி ஆகவேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி ஆகச் செய்யும் ஆற்றல் நம்மிடமே உள்ளது. நாம் இப்போதிருக்கிறா நிலைமை நம்முடைய முந்தைய செயல்களின் விளைவு என்றால், வருங்காலத்தில் எப்படி ஆக வேண்டும் என்று விரும்புகிறபடி ஆவதற்கு நம்முடைய இப்போதைய செயல்கள் அதை உண்டாக்க வேண்டும் என்று ஆகிறது. எனவே எப்படி செயல்பட வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

     பொதுவாக மனிதன் தன் கஷ்டங்களுக்கு அடுத்தவனைக் குற்றம் சொல்வான். இல்லையென்றால் கடவுளைக் காரணம் சொல்வான். அல்லது, ஒரு பேயை உருவக்கிக்கொண்டு விதி என்னும் அந்தப் பேய்தான் காரணம் என்பான். விதி என்பது எங்கே இருக்கிறது? விதி என்பது யார்? நாம் விதைத்ததை நாம் அறுக்கிறோம். நம் சொந்த விதியை உண்டாக்குவது நாமேதான். மற்ற யாரும் புகழ்ப்படவும் இடமில்லை. காற்று வீசுகிறது. பாய்மரக் கப்பலில் பாயை விரித்து வைத்தால் கப்பல் நகர்ந்து போகும். பாயைச் சுருட்டி வைத்திருக்கும் கப்பலுக்குக் காற்று பயன்படாது. இதில் காற்றின் குற்றம் எங்கே இருக்கிறது.

     கோழையும் முட்டாளும் தாம் இது விதி, இதற்கு விதி காரணம் என்று சொல்வார்கள் என்று கூறுகிறது ஒரு சமஸ்கிருதப் பழமொழி. வலுவான மனிதன்தான் நிமிர்ந்து நின்று ‘என் விதியை நான் தீர்மானிக்கிறேன்’ என்பான்.

     போய் எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்; “எழு, விழி. இன்னும் தூங்கிக் கொண்டிராதே, அல்லல்களை அகற்றவும் தேவைகளை அடையவும் உங்கள் ஒவ்வொருவரிடமும் ஆற்றல் இருக்கிறது. இதை நீங்கள் நம்பினால் அந்த ஆற்றல் வெளிப்படும்”. எல்லையற்ற ஆற்றல், அளவற்ற அறிவு, தளர்வுறாத சக்தி எல்லாம் உங்களிடம் இருக்கின்றன என்று நினைத்து அவற்றை வெளிக் கொணர முடியுமானால், நீங்கள் வெற்றிகரமாக விளங்குவீர்கள்.

     தன்னடத்தை உருவாகவும், மனவலிமை பெருகவும், அறிவு விருத்தி அடையவும், தன் சொந்த காலில் நிற்க வைக்கவும் செய்கிற கல்விதான் வேண்டும்.

     என் வாழ்வில் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடங்களில் ஒன்று, எந்த குறிக்கோளை அடைவதற்காக முயலும்போதும் மேற்கொள்ளும் வழி அல்லது செய்முறை பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்பது. அடைய வேண்டியதைப் பற்றி எடுத்துக்கொள்ளும் அக்கறைக்குச் சமமான அக்கறை அடைவதற்கான வழி பொறுத்தும் எடுத்துக் கொள்ளவேண்டும். எப்படியாவது லட்சியத்தை அடைவது என்பது கூடாது. எடுத்துக் கொள்ளும் வழிமுறையும் முறையானதாக, சிறப்பானதாக இருத்தல் வேண்டும். இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கும்போது அநேக பாடங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன். வெற்றிக்கான ரகசியம் எல்லாம் இந்தக் கொள்கையில் இருக்கிறது. அடைய வேண்டியதைப் பற்றிச் செலுத்தும் கவனம் அதை அடைவதற்கான வழியைக் கையாளுவதிலும் இருத்தல் வேண்டும் என்னும் பாடத்தை மறத்தலாகாது.

     கடுமையாக ஆய்ந்தபின் நான் புரிந்துகொண்ட பேருண்மை இதுதான். ஒவ்வொரு ஜீவனிலும் கடவுள் இருக்கிறார். அந்தக் கடவுள்தான் எங்கும் இருக்கிறார். அந்தக் கடவுளைத் தவிர வேறு கடவுள் கிடையாது. ஜீவனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும்.

செயல் பொறுத்த இரகசியம்:

     ஒரு செயலைச் செய்து அது வெற்றி பெறாமல் தோல்வியைச் சந்திக்க நேரும்போது ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்தால் நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது சதவீதம் கையாண்ட வழிமுறையில் கவனம் செலுத்தாததுதான் என்பது தெரியவரும். காரணமே காரியத்தை உண்டாக்குகிறது என்பதை மறந்ததால் தோல்வி ஏற்பட்டது. சரியான, ஒழுங்கான, வலுவான வழியைக் கையாண்டிருந்தால் தோல்வி ஏற்பட்டிராது. குறிக்கோளை அடைதல் காரியம். அடைவதற்கு கையாளும் வழி காரணம். காரணம் சரியாக இருந்தால் காரியம் நிறைவேறும். காரணத்தில் அதாவது கைக் கொள்ளும் வழிமுறையில் அல்லது செய்முறையில் கவனத்துடன் இருப்பது அவசியம் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய ரகசியம்.

     பகவத்கீதை என்ன சொல்கிறது? நமது முழு ஆற்றலுடன் இடைவிடாது செயலாற்ற வேண்டும் என்று கீதை சொல்கிறது. நாம் செய்கிற செயல் எதுவாயினும், அதில் நமது முழு மனத்தையும் செலுத்த வேண்டும். வேறு எந்தக் காரணத்தினாலும் மனம் செயல்புரிவதிலிருந்து விலகிச் செல்ல இடம் தரக்கூடாது.

     உண்மையான வெற்றியின் இரகசியம் இதுதான். பிரதிபலனை எதிர்பாராமல் இருப்பது. பிரதிபலனை எதிர்பாராதவன் முற்றிலும் தன்னலமற்றவன். அப்படிப்பட்டவனே எல்லாவற்றிலும் வெற்றி பெறுவான். சிறந்த வெற்றி அடைவான். ஆனால் நாம் சாதரணமாக காண்பது என்ன? தன்னலமற்றவன் வாழ்க்கையில் ஏமாற்றப் படுவதையே காண்கிறோம். மனம் வருந்த நேரிடுவதைப் பார்க்கிறோம். தன்னலம் சிறிதுமற்ற இயேசு கிறிஸ்துவே சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் அவரது சுயநலமின்மையே மாபெரும் வெற்றிக்குக் காரணமாயிருந்தது என்பதை உணர்கிறோம். அந்த சுயநலமின்மை கோடிக் கணக்கானவர்களின் வெற்றிக்கு ஆசி வழங்கியது என்பதை அறிகிறோம்.

     வாழ்வில் துன்பத்துக்கும் தோல்விக்கும் காரணம் பற்றில் சிக்கிக் கொள்வதுதான். கீதை சொல்வதைக் கவனிக்க வேண்டும். “இடைவிடாது வேலை செய். வேலை செய்துகொண்டே இரு. ஆனால் பற்று வைத்துப் பற்றில் சிக்கிக் கொள்ளாதே” என்கிறது. ஒவ்வொன்றிலிருந்தும் உன்னைப் பிரித்துக் கொள்வதற்கான திறமை உன்னிடம் இருத்தல் அவசியம். ஒன்றின்மீது முழு ஆற்றலுடன் பற்று செலுத்துபவன், அதிலிருந்நு தன்னை முழுவதுமாக அகற்றிக் கொள்ளும் திறனுடையவனாயிருப்பின் அவன் இயற்கையிலிருந்து மிகச் சிறந்ததைப் பெறக்கூடியவனாக இருப்பான். பற்றிக் கொள்ளும் திறமையின் அளவுக்கு, விட்டு விலகும் திறமையும் இருத்தல் வேண்டும்.

     நோய் என்பது நோய்க் கிருமிகளை மட்டும் பொறுத்தது அன்று. நம் உடலில் நிலவுகின்ற ஓர் அனுகூல நிலைதான் நோய்க்கிருமிகள் தாக்க இடமளிக்கிறது. இதை உணராமல் நோய்க் கிருமிகளின் மீது பழி போடுகிறோம்.

     பொதுவாக, எதற்கும் வெளியே உள்ள ஏதோ ஒன்றின்மீது பழி சுமத்துவது நமது இயற்கையாக இருக்கிறது. பிறரைச் சபிக்கிறோம். உண்மையில் நம்முடைய தகுதிக்கு ஏற்றதைத்தான் நாம் பெறுகிறோம். உலகம் கெட்டது. நாம் மட்டும் நல்லவர்கள் என்று சொல்லிக் கொண்டால் அது பொய்யல்லவா? நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் பொய். எனவே பிறரைச் சபிக்காமலும், பிறர்மீது பழி சுமத்தாமலும் இருங்கள். மனிதனாக இருங்கள். எழுந்து நில்லுங்கள். எதையும் எதிர்கொள்ளுங்கள். உங்களையே வசப்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி அடையுங்கள்.

3 கருத்துக்கள்:

•♥ANBU•♥ said...

நண்பா ரெம்ப அருமையான பதிவு. தொடரட்டும் உமது ராஜநடை .....

ச.சரவணன், said...

நன்றி நண்பா

koodal bala said...

சிறந்த தன்னம்பிக்கையை உபதேசிப்பதில் சுவாமிக்கு நிகர் யாருமே இல்லை எனலாம் .......நல்ல பதிவு !

Post a Comment