காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்:

     இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள  ஒரு நகரம் ஆகும். பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும்.
வரலாறு:
     காஞ்சி என்னும் ஒருவகை மருதநிலத்து மரங்கள் வளர்ந்து செறிந்திருந்தமையால் ”காஞ்சி” என்னும் பெயர் வழங்கலாயிற்று என்று கூறுவர். இந்த மரத்தை தற்போது வெண்தேக்கு என்றும் மருத மரம் என்றும் அழைக்கிறோம். பகைவனை வெல்லக் கருதியவன் வஞ்சிப்பூ சூடிப் போருக்குக் செல்வான் என்றும், அவனது போரை எதிர்கொண்டு தாக்குபவன் காஞ்சிமலர் சூடிப் போரிடுவான்என்றும் வெண்பாமாலை ஆசிரியர் ஐயனாரிதனார் குறிப்பிடுகிறார்.
     ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது என்றும், 'காஞ்சனம்' என்ற பெயரில் இருந்து மருவி 'காஞ்சி' ஆனது என்று கூறுவர். காஞ்சனம் என்றால் பொன்னாலான் நகரம் என்று  பொருள்.  செல்வ வளம் மிகுந்த பெரிய ஊர்களை அந்நாளில் ஊரின் பெயரோடு ’புரம்’ சேர்த்து அழைப்பர். அந்நாளில் காஞ்சி நகரம் பெரும் சீரும் சிறப்போடு இருந்ததை ’காஞ்சிபுரம்’ என்ற இந்த சொல் குறிக்கிறது.
     சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர். இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன கட்டப்பட்டன. பல்லவ அரசு கி.பி. 949க்குப் பிறகு நிலைகுலைந்தது. காஞ்சியை இராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான்.
     பின்னர் காஞ்சி சோழநாட்டின் ஒரு பகுதியாயிற்று. சோழர் காலத்தில் இதற்குத் தொண்டைமண்டலம் என்று பெயரிடபபட்டது.
சோழர்களின் ஆட்சி 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் வீழ்ச்சியுறவே, இப்பகுதியை காகாதியர் தம் வசப்படுத்தினார்.
     பின்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர ராஜ்ஜியத்தில் 1393 இல் காஞ்சிபுரம் மாவட்டம் இணைக்கப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த விஜயநகர ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. ஏகம்பரநாதர் கோயிலுக்கு, கிருஷ்ணதேவ ராயர் கோபுரம் கட்டித்தந்தார். விஜயநகரப் பேரரசு முகமதிய மன்னர்களால் 1565 இல் வீழ்ச்சியுற்றது.
     விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூரையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.    
     1639இல் மூன்றாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசப் பிரதிநிதியினால் இம்மாவட்டம் சீர்பெற்றுத் திகழ்ந்தது. இவரிடமிருந்து ஆங்கிலேயர் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடத்தை மானியமாகப் பெற்றனர். பிறகு கோல்கொண்டா சுல்தான்கள் தென்கிழக்கு இந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதும் காஞ்சிபுரமும் அவர்கள் வசமாயிற்று.
     1687 இல் கோல் கொண்டாவை முகலாயர் கைப்பற்றியதும் காஞ்சிபுரமும் கர்நாடகமும் முகலாயப் பேரரசின் வசமாயின.
     18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கவெறி கொண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதியப் போர்களால் செங்கற்பட்டும் காஞ்சிபுரமும் பலத்தத் தாக்குதல்களுக்கு இலக்காயின. பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் மகமதலி 1763 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியும் 1947இல் முடிவுற்றது. 

பிறந்த ஊரின்(காஞ்சிபுரம்) சிறப்பு:
     நிலம், நீர், தீ, வளி, வான் என்னும் ஐம்பூதங்களின் திருத்தலங்களாக முறையே காஞ்சிபுரம், திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் விளங்குகின்றன்.  இத்தலங்களில் முதன்மையான் காஞ்சிபுரம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.  முக்தி அளிக்கும் ஏழுதிருத்தலங்களாகிய காசி, காஞ்சி, அயோத்தி, மதுரை, மாயை, அவந்தி, துவாரகை ஆகியவற்றில் ஒன்றாக திகழ்கின்றது.  
காஞ்சிபுரம் பற்றிய இலக்கிய குறிப்புகள்:
 காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவரிகளின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், ,கலை மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் இப்பகுதி தொண்டை மண்டலம் என குறிப்பிடப்பட்டது. பல்லவர்களின் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது. மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது.
"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.

வேகவதி ஆற்றின் கரையில், வடநாடும் தென்னாடும் வணங்கிப் போற்றும் தொண்டைமான் இளந்திரையன் என்ற குறுநில மன்னனால் ஆளப்பட்ட பழைய நகரம் காஞ்சி மாநகரமாகும். இக்காஞ்சி மாநகரத்தை மேலும் செப்பம் செய்து கடிநகராக்கினான், கரிகால் பெருவளத்தான் எனும் சோழப் பேரரசன். திருவேகம்பநாதர் திருக்கோயிலின் திருக்கோபுரத்தக் கட்டுவித்தான் கரிகால் பெருவளத்தான் என்பர்.

காஞ்சி மாநகரம் சமயசமரசம் போற்றிய பெருநகராக திகழ்ந்தது.சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் காஞ்சி மாநகரைக் கண்டிருக்கின்றன. தெய்வநலம் மணக்கும் திருநகரம் காஞ்சி மாநகரமாகும். ’கோயில் மாநகரம்’ என்று போற்றம்பெறும் இக்காஞ்சி மாநகரத்தில் 108 சிவன் திருக்கோயில்களும் 18 திருமால் திருக்கோயில்களும் உள்ளன. திரும்பிய பக்கமெல்லாம் கோவில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே! என்றும், காஞ்சி வரதப்பா! என்றும் வணங்கி நிற்போர் பலர். புத்த சமயத்தைச் சார்ந்த அறவண அடிகள் காஞ்சியில் வாழ்ந்தார். இந்நகரில்தான் மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு புத்த சமயக் கொள்கைகளைக் கற்றறிந்தாள்.  மணிமேகலை இந்நகரில் புத்த பீடிகை அமைத்து, அமுதசுரபி மூலம் பசிப்பிணி போக்கி, அறவண அடிகளிடம் தவத்திறம் பூண்டு அறம் கேட்டதை ‘மணிமேகலை’யில் அறியலாம். அறவண அடிகள் தங்கியிருந்த அவ்விடம் இன்று அறவணஞ்சேரி என்றும், அறப்பணஞ்சேரி என்றும் வழங்கப்படுகிறது. 
நாலந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராகவும் பேராசிரியரகவும் விளங்கியவர் காஞ்சியில் பிறந்த தருமபாலர் என்னும் தத்துவ ஞானி ஆவார்.  சீனத்தில் ‘ஷாவ்லின்’ என்னும் இடத்தில் உள்ள புத்தத்திருமடம் அமையக் காரணமாய் இருந்தவருமான போத்தருமரும் காஞ்சி நகரச் சேர்ந்தவரே.  காஞ்சிபுரத்தை அடுத்த திருப்பருத்திக்குன்றத்தில் சமணதுறவிகள் தவமிருந்தும்,  தம் சமயத்தைப் பரப்பியும் வாழ்ந்திருந்தனர். இந்த திருப்பருத்திக்குன்றத்தில் சமணர்கள் நிறைந்து வாழ்ந்த காரணத்தால் அவ்வூர் சமணக்காஞ்சி (ஜைனக்காஞ்சி) என்று வழங்கப்படுகிறது. 
இப்புண்ணிய பூமியில்தான், பன்னிரு ஆழ்வார்களுல் ஒருவராகிய பொய்கை ஆழ்வாரும், வடகலையினர் போற்றும் வேதாந்ததேசிகரும் தோன்றினர்.  திருக்கச்சிநம்பிகள் என்னும் வைணவப் பெரியார் நாள்தோறும் பூவிருந்தவல்லியிலிருந்து காஞ்சிபுரத்திற்கு நடைப்பயணமாய்ச் சென்று திருஆலப்பரிவட்டத் தொண்டு செய்த வரதராச்ப் பெருமாள் திருக்கோயிலும் இக்காஞி மாநகரில்தான் உள்ளது.  இராமநுசரின் ஐந்து ஆசிரியர்களுள் இவரும் ஒருவர்.  திருப்பெரும்புதூரிலே தொன்றி ‘விசிட்டத்வைதம்’ என்னும் தத்துவக்கொள்கையை நிலைநாட்டிய, உடையவர் எப்பெருமானார் இராமநுசர் வாந்ந்து சிறப்பு செய்த திருத்தலமும் இதுவே. இராமநுசரின் மற்றொரு ஆசிரியர் பெரியநம்பிகளும் இங்கே வாழ்ந்தவர்.  

ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த பல்லவர்களின் காலத்தில் கலைமகளும், திருமகளும் கலந்து உறைந்திருந்த காரணத்தால் கல்விக் கரையிலாக் காஞ்சி மாநகர் என்று அப்பர் சுவாமிகளால் அருளப்பெற்றது.
முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முக்கியமானதும், புராண வரலாற்றுப் பெருமைகள் நிறைந்ததுமான காஞ்சிபுரம் ஒரு கோவில் நரகமாகும்.
சிற்பக் கலையில் சிறந்து, கலை நுணுக்கத்தில் உயர்ந்து, வான்முட்டி நிற்கும் கோபுரங்கள் ஏராளம்! 
சிற்பங்களைச் செதுக்கி, அழகு படுத்தப்பட்ட உயர்ந்த தூண்கள் எழில் கூட்டுகின்றன. எங்கு நோக்கினும் எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும் எழில் கொஞ்சும் இறைவன் திருமேனிகள் கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஆழ்வார்களும், நாயன்மார்களும், சீன நாட்டின் நல்லறிஞர்களும் போற்றிப் புகழ்ந்த இம்மாநகரின் மிக முக்கிய ஆலயங்களின் தரிசனம் காண, இந்நூலை உங்கள்முன் படைக்கிறேன்.
சிறப்புகள்: 
     இந்தியாவில் மொத்தம் 7 முக்தி ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் காஞ்சிபுரமும் ஒன்று. மேலும் காஞ்சி பட்டுக்கு மட்டுமல்ல, கலை, கலாசாரம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கும் ஊராகும். காஞ்சிபுரம் நமது தமிழகத்தின் பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. இங்கே ஓடும் நதி பாலாறு ஆகும்.
     காஞ்சிபுரம் "ஆயிரம் கோவில் நகரம்" என்று அழைக்கபடும் நகரம் ஆகும். இது பஞ்ச பூதங்களில் ஒன்றாக விளங்கப்படுகிறது.  
    "திருவாரூரில் பிறக்க முக்தி,
     காஞ்சியில் வாழ முக்தி,
     காசியில் இறக்க முக்தி,
     திருவண்ணாமலையை நினைக்க முக்தி" 
என்ற வரிகள் மூலம் காஞ்சியின் சிறப்பை அறிய முடிகிறது.

பல்லவர்கள் வரலாறு :காஞ்சி பெரியவரின்தெயவத்தின் குரல் -ல் இருந்து:

     பல்லவம் என்றால் துளிர். போதம் அல்லது போத்ரம் என்றாலும் துளிர் என்றே அர்த்தம். அச்வத்தாமாவிடம் ஒரு வனத்திலே தேவ ஸ்த்ரீ ஒருத்தி ஒரு பிள்ளையைப் பெற்றாள் என்றும், அதைத் துளிர்ப் படுக்கையிலே போட்டுவிட்டு தேவலோகம் போய்விட்டாள் என்றும், அந்தப் பிள்ளைதான் துளிரில் வளர்ந்ததால் ‘பல்லவன்' என்று பெயர் பெற்று ராஜாவாக ஆட்சிக்கு வந்தான் என்றும் கதை இருக்கிறது.
தெலுங்கு தேசத்தில் அமராவதி என்ற இடத்திலுள்ள சிம்மவர்ம பல்லவனின் சமஸ்க்ருதக் கல்வெட்டில் இந்தக் கதை விரிவாகச் சொல்லியிருக்கிறது. அரக்கோணத்திற்கு ஏழெட்டு மைலிலுள்ள வேலூர் பாளையம் என்கிற இடத்தில் அகப்பட்ட மூன்றாவது (விஜய) நந்தவர்மாவின் தாமிர சாசனத்திலும் இந்தக் கதை குறிப்பிட்டிருக்கிறது. அச்வத்தாமா பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த பிராம்மணர். அவருடைய பிதாவான துரோணாசார்யாருக்கு பாரத்வாஜர் என்றே ஒரு பெயர். பல்லவ ராஜாக்கள் தங்களை பாரத்வாஜ கோத்திரக்காரர்களாகவே சாசனங்களில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

பல்லவ ராஜாக்களே சாசனங்களில் இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டாலும், பழைய தமிழ் இலக்கியங்களிலிருந்து ஆராய்ச்சி பண்ணித் தமிழபிமானிகள் பல்லவர்களின் ‘ஆரிஜின்' (தோற்றுவாய்) பற்றி வேறே ஒரு கதை சொல்கிறார்கள்.

நாகப்பட்டினத்துச் சோழ ராஜா ஒருத்தனுக்கு நாக கன்னிகையிடம் ஒரு பிள்ளை பிறந்தது. அவள் தொண்டைக் கொடியைச் சுற்றி அந்தக் குழந்தையை சமுத்திரத்தில் மிதக்க விட்டுவிட்டாள். அதுதான் கரையேறித் தொண்டைமான் என்ற பல்லவ ராஜா ஆயிற்று என்று இந்தக் கதை. காஞ்சி மண்டலத்துக்கே தொண்டை மண்டலம் என்று பெயர்.

நந்திவர்மா வைகுண்டப் பெருமாள் கோயில் கட்டினான். அதற்குப் ‘பரமேச்வர விஷ்ணுக்ருஹம்' என்றே பழைய பெயர். விஷ்ணுவின் க்ருஹம், ஆனால் பரமேச்வரனின் பேரில் இருக்கிறது என்கிறபோதே, சைவ, வைஷ்ணவ ஒற்றுமை தெரிகிறது. ஆனால் இங்கே ‘பரமேச்வரன்' என்பது கோயில் கட்டிய நந்திவர்மாவின் இன்னொரு பெயரை வைத்துத்தான்.

ராஜராஜன் கட்டியது ராஜராஜேச்சுரம், கங்கை கொண்ட சோழன் கட்டியது கங்கை கொண்ட சோழீச்சுரம் என்கிற மாதிரி பரமேச்வரப் பல்லவ மல்லனான நந்திவர்மா கட்டிய வைகுண்டப் பெருமாள் கோயில் அவன் பெயரிலேயே பரமேச்வர விண்ணகரம் ஆயிற்று.

கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் புராண சம்பந்தமானவையாகப் பிரசித்தி பெற்றிருக்கின்றன. வைகுண்டப் பெருமாள் கோயில் சிற்பங்களோ சரித்திர சம்பந்தத்தினால் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

ராஜசிம்மன் ரொம்பவும் பேர் புகழோடு ஆட்சி செய்துவிட்டுக் காலகதி அடைந்த பின் ராஜ்யத்தில் ஒரேயடியான குழப்ப நிலை உண்டாயிற்று. சாளுக்கிய ராஜாவான விக்ரமாதித்தன் காஞ்சிபுரத்தின்மீது படையெடுத்து வந்து அதைக் கைப்பற்றிக்கொண்டான்.

ராஜசிம்மனுடைய பிள்ளையும் ஒரு பரமேச்வர வர்மாதான். அவன் ரொம்பவும் ஸ்வல்ப காலமே ஆட்சி பண்ணிவிட்டு, சந்ததி இல்லாமலே இறந்து போய்விட்டான். தலைப் பிள்ளைக்குப் பட்டம் என்ற நம்முடைய Primogeniture வழக்கப்படிப் பல்லவ வம்சத்தில் சிம்ம வர்மாவுக்கு அப்புறம் சிம்மவிஷ்ணு வழியாக ராஜசிம்மனின் பிள்ளைவரை போன நடுக்கிளை அதோடு முடிந்துபோயிற்று.

அப்புறம் அதன் பக்கக் கிளைகளில் ஒன்றில் வந்த கோத்திர தாயாதியான ஹிரண்யவர்மா என்பவனிடம் பல்லவ ராஜ்யத்தின் முக்கியஸ்தர்கள் தூது போய் கேட்டுக்கொண்டு, அவனுடைய பிள்ளையான இன்னொரு பரமேச்வர வர்மாவுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் பண்ணினார்கள். அவன்தான் நந்திவர்ம பல்லவ மல்லன் என்று பெயர் வைத்துக்கொண்டு அறுபது வருஷத்திற்குமேல் ஆட்சி நடத்தினான். அவனுடைய இன்னொரு பெயரில் அமைக்கப்பட்ட பரமேச்வர விண்ணகரமாகிய வைகுண்டப் பெருமாள் கோயிலில் இதைப் பற்றிய கல்வெட்டு இருக்கிறது.

இப்படி எழுத்திலே வெட்டியிருப்பதைவிட முக்கியமாக இந்தக் கோயிலுக்கு என்ன சரித்திர பிரசித்தி என்றால், மஹாவிஷ்ணுவிலிருந்து ஆரம்பித்து பிரம்மா வழியாகப் பல்லவ ராஜாக்கள் அத்தனை பேரின் வம்சாவளிக் கதைகளையும், இந்தக் கோயிலைக் கட்டினவர் வரை, சிற்ப வரிசைகளில் வடித்துக்காட்டியுள்ள ஒரு மண்டபம் அங்கே இருப்பதுதான்.

சரித்திர முக்கியத்துவம் மட்டும்தான் என்றில்லாமல் மத சம்பந்தமான விசேஷமும் அந்தக் கோயிலுக்கு உண்டு. இங்கே மூன்று அடுக்குகளாக சந்நிதிகளை அமைத்து, பெருமாளின் நின்ற திருக்கோலத்தைக் கீழ் தளத்திலும், இருந்த (உட்கார்ந்த) திருக்கோலத்தை நடுத் தளத்திலும், கிடந்த (சயனித்த) திருக்கோலத்தை மேல் தளத்திலும் அமைத்திருக்கிறது.

‘அஷ்டாங்க விமானம்' என்பதாகப் பொதுவாகச் சொல்லப்படுகிற ஆகம விதிகளின்படி இப்படிப் பல அடுக்குகளில் ஆலயம் நிர்மாணிப்பது ரொம்பவும் அபூர்வமே. பாண்டி நாட்டில் திருக்கோட்டியூரிலுள்ள பெருமாள் கோயில், மதுரையிலேயே கூடலழகர் கோயில், காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயில், இதைக் கட்டிய நந்திவர்மனின் பிள்ளையான தந்திவர்மன் காஞ்சிக்கு சமீபத்திலுள்ள உத்திரமேரூரில் கட்டிய சுந்தர வரதப் பெருமாள் கோயில் ஆகிய நாலில்தான் இந்த அமைப்பு இருப்பதாகத் தெரிகிறது.

நந்திவர்ம பல்லவ மல்லன் திருமங்கையாழ்வாரின் காலத்தில் இருந்தவன் என்று தெரிகிறது. அவனைத் தம்முடைய பாசுரத்தில் குறிப்பிட்டு அவர் பாடியிருக்கிறார்.


இந்த ஆழ்வாரிலிருந்து குரு, சிஷ்ய சமாசாரமாக, சிஷ்யனுக்காக ஸ்வாமியையே, ‘இப்படிப் பண்ணு, அப்படிப் பண்ணு' என்று சொல்லித் தாம் சொன்னவண்ணம் செய்ய வைத்தவர் திருமழிசையாழ்வார். அவர் காஞ்சீபுரத்திலே ஒரு பெருமாள் கோயிலில் வாசம் பண்ணிவந்தாரென்று சொல்லி அது எந்தக் கோயில் என்று சொல்வதில்தான் இருந்தேன். காஞ்சியிலுள்ள பதினாலு திவ்ய தேசங்களுக்குள் அவர் இருந்தது திருவெஃகா என்பதிலாகும்.
கோவில்கள்:
     ஒரு காலத்தில் பல்லவர்களின் தலைநகரமாக மகோன்னதச் சிறப்புகளுடன் இருந்த மாநகரம் காஞ்சிபுரம்.பின்னர் சேரர்கள் விஜயநகரப் பேரரசு, நாயக்கர் காலம் என்று வரலாற்றில் தொடந்து புகழ் பெற்ற நகரம்.சுமார் ஆயிரம் கோவில்கள் இங்கு கட்டபட்டிருப்பதாக சொல்வார்கள்.தற்போது எஞ்சியிருப்பவை சுமார் 100 கோவில்கள் இருக்கலாம்.காஞ்சி நகரத்தின் எந்த சிறு தெருவிலும் ஒரு கோவில் இருக்கும்,ஒரு வரலாறு இருக்கும். நமது
பாரம்பரியம்,வரலாறு ஆகியவை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் பார்க்கவேண்டிய இடம் இது.
தெற்கே விஷ்ணு காஞ்சி,வடக்கே சிவகாஞ்சி - இப்படி இரண்டாக பிரிக்கபட்டுள்ளது இந்த நகரம்.சிவகாஞ்சியில் சிவன் கோவில்கள் அதிகம்,விஷ்ணுகாஞ்சியில் வைணவ கோவில்கள் அதிகம். இது கோயில்களுக்கு சிறப்பு பெற்ற ஊர் ஆகும். பல்லவர், சோழர், விஜயநகர பேரரசர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன. கைலாசநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில்,வரதராஜபெருமாள் கோயில், சுப்பரமணிய சுவாமி கோவில், கட்பேசுவரர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் போன்ற பல கோவில்கள் ஆகியவை சிவகாஞ்சியில் உள்ளன.இதை பெரிய காஞ்சிபுரம் என்பார்கள்.தெற்கே சின்ன காஞ்சிபுரம் அல்லது விஷ்ணு காஞ்சியில் இருப்பது வரதராஜ பெருமாள் கோவில்.
     காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.
     பாரம்பரியம்,வரலாறு ஆகியவை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் பார்க்கவேண்டிய இடம் இது. பாரம்பரியம் மிக்க இந்த நகரில் இருந்து அறிஞர் அண்ணா புறப்பட்டு வந்ததில் வியப்பேதுமில்லை.
கைலாசநாதர் கோவில்:
கோவில் வரலாறு:    
     இந்த கோவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட முதல் கோவில் ஆகும். இந்த கோவில் பல்லவ மன்னன் ராஜசிம்ம பல்லவ மன்னரால் கட்ட தொடங்கப்பட்டு அவரது மகன் மகேந்திரவர்ம பல்லவரால் களிம்பினால் கட்டிமுடிக்கப்பட்டது.
     இக்கோவில் கைலயநாதர்(சிவன்) கோவில் ஆகும். சிற்ப கலைக்கு புகழ் பெற்ற கோவில்.
     சோழ மன்னன் ராஜராஜ சோழனுக்கு தஞ்சை பெரிய கோவிலை கட்டும் ஆசை இக்கோவிலை கண்டபிறகுதான் வந்ததாம். அந்த அளவுக்கு பெருமை பெற்றது இக்கோவில்.
     இக்கோவிலைப் பற்றிய காணொளி:
 

அழகிய சிற்ப வேலைப்பாடுகள்:

கோயிலின் சுற்றுச் சுவர் முழுவதும் கருங்கற்களால் ஆன சிற்பங்களும், கோயிலின் உள்ளே சுடுமண் சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களைக் காணக் கண் கோடி வேண்டும்.  பல்லவர்களின் சிற்ப கலைக்கு சான்றாக விளங்கும் மாமல்லபுரம் போல இக்கோவிலும் ஒரு சான்றாக விளங்குகிறது.ஒரு சுவரையும் விட்டு வைக்காமல் எங்கு திரும்பினாலும், உங்கள் கண்ணுக்கு படுவது சிறபங்கள் தான். உள்ளே அற்புதமான சிவ லிங்கம் ஆறு அடி உயரம் கொண்டது.
     
     தற்போது, இக்கோவில் இந்திய தொல்பொருள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஏகாம்பரநாதர் கோவில்:

ஏகாம்பரேஸ்வரர் கோவில்,  பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது.   இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது. 



மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர்.  முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

வரலாறு:

      முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது.  மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது.

      இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார்.  இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

      ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.

     ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஏற்பட்ட போரில் இராபர்ட் கிளைவ், ஏகாம்பரநாதர் கோயிலை தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டான்.
                                 (நன்றி:http://tn-tourguide.blogspot.com)

வரதராஜ பெருமாள் கோவில்:

காஞ்சியில் விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்பட்ட வைணவத் திருக்கோயில்களில் மிகச் சிறப்பு கொண்டது இக்கோயில். 108 திருப்பதிகளில் ஒன்று.  இது ஏறக்குறைய 23 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கோயில் விஜயநகரப் அரசர்களால் கட்டப்பட்டதாகும். ஐந்து பிரகாரங்களும், இருபெரும் கோபுரங்களும் உள்ளன. நாற்பக்கமும் உயர்ந்தெழும்பிய மதிற்சுவர்களும் ஆயிரங்கால் மண்டபமும் இருக்கின்றன. முதற்பிரகாரத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் கலையழகுடன் கண்கவர் அமைப்பைக் கொண்டதாகும். ஒவ்வொருத் துணிலும் தேர்ந்தச் சிற்பிகளின் கைவண்ணம் மிளிர்கிறது. நான்கு மூலைகளிலும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சங்கிலிக் கோர்வை தொழில் நுட்பத்துடன் வியத்தகு முறையில் அமைந்துள்ளன. அன்னப்பறவை மற்றும் கிளியுடன் காதற்கடவுளும் அவரின் துணைவியும் காட்சியளிக்கும் சிற்பம் காணத்தக்கது.

இம்மண்டபத்தைச் சார்ந்த ஆனந்த தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தின் நடுவே ஒரு நீராழி மண்டபமும் அத்திவரதர் மண்டபமும் அமைந்துள்ளன 

வைகுண்ட பெருமாள் கோவில்:
     இந்த விஷ்ணு ஆலயம் நல்ல எழிலமைப்பைக் கொண்ட வைணவக் கோயிலாகும். கி.பி.674 இலிருந்து கி.பி. 800 வரையிலுமான காலத்தில் பரமேஸ்வர பல்லவனாலும், இரண்டாம் நந்தி வர்மனாலும் கட்டப்பட்டக் கோயிலாகும் இது. கைலாச நாத கோயில் கட்டியப் பின்னரே இது கட்டி முடிக்கப்பட்டது. பிற்கால கோயில்களில் ஆயிரங்கால் மண்டபம் உருவாக, இக்கோயிலின் சிங்கமுகத் தூண்களது வடிவமைப்பே தூண்டுகோலாய் அமைந்தது.

========மற்ற கோவில்கள் பற்றிய பதிவு விரைவில்=====                        காஞ்சி நகரத்தின் சிறப்புகளையும், அதை செம்மையாக ஆட்சி செய்த பல்லவர்களைப் பற்றியும் அமரர் கல்கியின் 'சிவகாமி சபதம்' வரலாற்று நாவல் மூலம் அறியலாம்.