Tuesday, December 20, 2016

தாமரை மற்றும் அல்லி வீட்டில் வளர்ப்பது எப்படி

    
     தாமரை மற்றும் அல்லி, இரண்டையும் விதை அல்லது வேர்த் தண்டு மூலம் உற்பத்தி செய்யலாம். தாமரை விதை அளவில் 0.30இஞ்ச் முதல் 0.90 இஞ்ச் அளவில் இருக்கும். அல்லியின் விதை கடுகளவே(கடுகைவிட சிறியதாகவும்) இருக்கும். முதலில் தாமரையைப் பற்றி பார்க்கலாம், 



  

  


  

 



   
தாமரை: 
 

தாமரை விதை முளைப்பதற்கு மிக அதிக காலமாகும் ( மிகவும் அதிகம்). அதனால் விதையின் ஏதேனும் ஒரு பக்கத்தை உப்பு காகிதத்தில்(sand paper or pile) தேய்த்து, ஒரு பாட்டிலில் சூடான நீர் விட்டு(சாதாரண நீரும் விடலாம்) அதில் அந்த விதையை போட்டு ஜன்னல் ஒரத்தில் வைக்க வேண்டும். (விதையில் ஓட்டையும் போடலாம் ஆனால் கொஞ்சம் ஜாக்கிரதை), தினமும் அந்த நீரை மாற்றி வருவது நல்லது. விதை இரண்டு அல்லது மூன்றாவது நாட்களிலேயே முளைக்க ஆரம்பித்துவிடும், விதை முளைத்து வர வர பெரிய பக்கெட் தண்ணீரில் மாற்றி விடுவது நல்லது. இரண்டு இலைகளுக்கு மேல்(தண்ணீருக்கு மேல்) வந்த உடன் நடவு செய்யலாம். விதையின் முளைப்புத் திறனைப் பொருத்து இதற்கு இரண்டு வாரமும் அல்லது மூன்று வாரமும் ஆகலாம்.
      நீங்கள் விதை தயார் செய்த முதல் நாளே ஒரு பிளாஸ்டிக் டப்பிலோ சிமென்ட் தொட்டியிலோ களிமண்(கிடைக்காத பட்சத்தில் செம்மண்) 5 இஞ்ச் அளவிற்கு நிரப்பி அதில் நீர் விட்டு, அதனுடன் பத்தில் ஒரு பங்கு காய்ந்த மாட்டு எரு(வரட்டி) அல்லது ஆட்டு எரு நன்கு கலந்து மண்ணில் உள்ள கற்கள் மற்றும் தேவையற்றவைகளை நீக்கி விட வேண்டும். சிறிது நாட்கள் அப்படியே இருந்தால் தான் விதை நடவு செய்வதற்குள் மண் சரியான பதத்திற்கு வரும். மேலே குறிப்பிட்டது போல் விதையில் இரண்டு இலைகள் தண்ணீருக்கு மேல் வந்த உடன் நடவு செய்யலாம். அதற்கு முதலில் தொட்டியில் உள்ள நீரை எடுத்து விட்டு, விதையை நட்டு அதன் மேல் சிறிய கூழாங்கள்ளை வைத்து விடுவது நல்லது, இல்லையென்றால் விதை மிதக்க ஆரம்வித்துவிடும். அந்த களி மண் மேல் ஆற்று மண்ணோ அல்லது சிறிய கூழாங்கற்களை சேர்ப்பது அவரவர் விருப்பம். பிறகு பொருமையாக தொட்டியில் நீர் நிரப்ப வேண்டும். கண்டிப்பாக இந்த நீரில் கொசு முட்டை வைக்கும். அதனால் இரண்டு நாட்கள் கழித்து அந்த தொட்டியில் மீன்களை சேர்க்க வேண்டும், கம்புசியா, கப்பீஸ், மாலி, ஸீப்ரா வகைகளில் ஏதேனும் ஒரு வகை மீன்களை சேர்க்கலாம். தொட்டியை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும். தினமும் நீர் குறைய குறைய நீர் சேர்த்து வர வேண்டும்.
     தாமரை விதை மூலம் வளர்ந்து பூக்க 1,5 வருடம் முதல் இரண்டு வருடம் கூட ஆகலாம், அதனால் வேர்த் தண்டு மூலம் வளர்ப்பதே சிறந்தது. விதையின் மூலம் தொடங்குவதாக இருந்தால் மார்கழி மாதம் முடிந்தவுடன் தொடங்கவும்.

அல்லி:




     அல்லியில் நிறைய வகைகள் உள்ளன. அல்லி மூன்று முதல் நான்கு மாதத்திலேயே பூக்க ஆரம்பிக்கும். அல்லியின் விதை மிகவும் சிறியது. அதனால் தண்ணீர் விதையை முளைக்க வைத்து நடவு செய்வது சிரமம், அதனால் ஒரு சிறிய கப்பில் களிமண் நிரப்பி அதில் சில விதைகளை தூவி அதன் மேல் ஆற்று மணல் சிறிது நிரப்பி அதை ஒரு பக்கட்டிலோ அல்லது தாமரை நடவு செய்த தொட்டியிலோ வைத்து நன்கு வெயில் படும் இடத்தில் வைத்து விட வேண்டும். அதன் மேல் பாசி படிந்தால் நீக்கி விட வேண்டும், விதை மூன்று முதல் நான்கு வாரங்களில் முளைக்கும். சில சமயம் இன்னும் தாமதமாகலாம். விதை முளைத்து சிறிது வளர்ந்தவுடன் பிரித்து தனி தனி டப்பில் நடலாம்.
   

 

 '


   

 


    தாமரை விதை நாட்டு மருந்து கடைகளிலும், பூக்கடைகளிலும் (பூ மார்க்கெட்களிலும்) மிகவும் மளிவான விலையில் கிடைக்கும். அல்லி விதை ஆன்லைனில் வாங்கலாம்.